மாடுகளுக்கு அளவான பொங்கல் கொடுத்தால் அமிலநோய் ஆபத்தை தவிர்க்கலாம் கால்நடை பராமரிப்பு துறை தகவல்

நத்தம், ஜன. 14: மாடுகளுக்கு சர்க்கரை பொங்கலை அளவுக்கு மீறி கொடுத்தால் அமில நோயால் அவை பாதிக்கப்படலாம் என திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை முன்னாள் இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: உழவு தொழிலுக்கு உறுதுணையாக கால்நடைகள் இருந்து வருகின்றன. இதற்காக பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டு பொங்கலன்று கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து, கரும்பு படைத்து விவசாயிகள் தங்கள் நன்றியினை தெரிவிக்கின்றனர். அன்றைய தினம் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பொங்கல், பச்சரிசி, சாதம், கரும்பு மற்றும் பழங்களையும் சேர்த்து உண்ண கொடுப்பது வழக்கம். அவ்வாறு கொடுக்கும் போது சிலர் அளவுக்கு அதிகமாக கொடுத்து விடுகின்றனர். இப்படி கொடுப்பதால் மாடுகளுக்கு அமில நோய் ஏற்படும்.

இப்பொருட்களை கால்நடைகள் அதிகளவில் உண்பதால் ரூமன் எனப்படும் வயிற்றில் பாக்டீரியா கிருமிகள் எண்ணிக்கை பெருகி காரத்தன்மை குறைந்து அமிலநோய் ஏற்படும். இதனால் புளிப்பு ஏற்பட்டு லேக்டிக் அமிலம் ஏராளமாக சுரந்து ரத்தத்தின் தன்மையை மாற்றிவிடும். இதன் காரணமாக மாடுகள் தீவனம் சாப்பிடாது, உடல் நீரில் இழப்பும், வயிறு உப்புசமும் கண்டு மிக மோசமான நிலையை அடையும். கால்நடைகளுக்கு நெல், அரிசி, அரிசிச்சோறு, கோதுமை, ஓட்டல்களின் கழிவு பதார்த்தங்கள், விருந்துகளில் மீதமாகும் எஞ்சிய உணவுகளை சாப்பிடும் போது அமில நோய் உண்டாகும். மேலும் அளவுக்கு அதிகமான இனிப்பு பண்டங்களை சாப்பிடும் போதும் வயிற்றில் கடுமையான உப்புசம் ஏற்பட்டு அவை இறக்க நேரிடும்.

கால்நடைகள் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் தீவனங்களுக்கே தங்களை பழக்கப்படுத்தி கொள்பவை. தீவனத்தில் திடீர் மாறுதல் ஏற்படும் போது ஒவ்வாமை (அலர்ஜி) உண்டாகி கடுமையாக உடல் ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கின்றன. தீவனத்தில் திடீர் மாறுதல் செய்யும் போது அவற்றை சிறிதுசிறிதாக கொடுத்து பின்னர் அளவை அதிகரித்தால்தான் அந்த உணவு வகைகளுக்கு அவைகள் தம்மை தயார்படுத்தி கொள்ளும். நோய் கண்ட மாடுகளுக்கு சோடா உப்பு 200 கிராம் கொடுக்கலாம். குளோர் டெட்ரா சைக்கிளின் மாத்திரைகள் தரலாம். நிலைமை மோசமாக இருந்தால் தாமதம் செய்யாது உடனே கால்நடை டாக்டரிடம் காட்ட வேண்டும். தமிழகத்தில் வரும் 15ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்கள் கால்நடைகளுக்கு பொங்கல் போன்ற விசேஷ உணவு வகைகளை 200 கிராம் வரை கொடுக்கலாம். அளவான பொங்கல் கொடுத்து அமிலநோய் ஆபத்திலிருந்து பாதுகாக்கலாம்’ என்றார்.

Related Stories: