7,000 மாணவர்கள் பங்கேற்பு பள்ளிகளில் சுகாதார, சமத்துவ பொங்கல் துவரங்குறிச்சி அருகே பெரியமலைஆற்றுப்படுகையில் இரவில் நடக்கும் மணல் திருட்டு

மணப்பாறை, ஜன.14: துவரங்குறிச்சி அருகேயுள்ள பெரிய மலை ஆற்று படுகையில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணல் திருட்டிற்கு அதிகாரிகள் துணை போவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு .மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா. துவரங்குறிச்சி அருகேயுள்ள அடைக்கம்பட்டி ஊராட்சி, அண்ணாநகர் பெரிய மலையிலிருந்து இளுப்பங்குளம் படுகை வரை மூன்று கிலோ மீட்டர் தூரம் நீண்ட வாரி செல்கிறது. இதை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்த ஆற்றுப் படுகையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில், டிராக்டரில் மணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் திருட்டு குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, பெரிய மலை ஆற்று படுகையை ஒட்டியுள்ள நிலங்களில் பலர் விவசாயம் செய்து வருகிறோம். சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் வந்தது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியுடன் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், இரவு நேரங்களில் ஆற்றுப்படுகையில் இறங்கி மணலை திருடி சிலர் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக, ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள கஞ்சநாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் டிராக்டருடன் வரும் மணல் திருடர்கள், வளமான மணலை திருடி அருகில் எங்காவது பதுக்கி வைக்கின்றனர். பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மணலை வெளியிடங்களுக்கு எடுத்து சென்று விற்று வருகின்றனர். இங்கிருந்து அருகிலுள்ள துவரங்குறிச்சி, செந்துறை, மருங்காபுரி, வளநாடு, கொட்டாம்பட்டி போன்ற பகுதிகளுக்கு மணல் கடத்தி செல்லப்படுகிறது. மணல் கடத்தல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், அவர்கள் வந்து சேருவதற்குள் மணல் திருடர்களுக்கு தகவல் தெரிந்து விடுகிறது. இதனால் அவர்கள் தப்பிவிடுகின்றனர். இதனால், அதிகாரிகள் மணல் கடத்தல் ஆசாமிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு தான் ரோந்து செல்வதாகவும், இதனால் மணல் திருட்டுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் அடைக்கம்பட்டி ஆற்றுப்படுகையில் வளமான மணல் குவியல் ஆற்றில் தங்கியுள்ளது. இந்த மணல் திருட்டை தடுத்து விவசாயத்தை காக்க மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டை தடுத்து முன்வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Durankurichi ,Pongal ,
× RELATED வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்...