முருகனிடம் 6 நாள் கஸ்டடியில் விசாரணை வங்கி கொள்ளை வழக்கில் ஒரு கிலோ தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம் மீட்பு

திருச்சி, ஜன.14: பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் முருகனிடம் 6 நாள் கஷ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில் ஒரு கிலோ தங்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை போலீசார் மீட்டனர். அதையடுத்து அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு நீதிபதி உத்தரவின்பேரில் பெங்களூரு சிறையில் அடைப்பதற்காக கொண்டு சென்றனர். திருச்சி வங்கி கொள் ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முருகனை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தக்கோரிய மனு ரங்கம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி முருகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். திருச்சி சத்திரம்பஸ்நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2ம் தேதி ரூ.13 கோடி மதிப்புள்ள 29 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக, மணிகண்டன், கொள் ளை கும்பல் தலைவன் முருகனின் சகோதரி கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். முருகன் கொடுத்த தகவலின்பேரில், பெரம்பலூர் அருகே காட்டில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் கணேசனிடமிருந்து 6 கிலோ நகை, மணிகண்டனிடமிருந்து 4.800 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது.

பல கட்ட போராட்டங்களுக்கு இடையில் பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்து முருகனை 7 நாள் காவலில் திருச்சிக்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மேலும் 1 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் திருவாரூர் எஸ்பியாக இருந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் விலை உயர்ந்த கார் வாங்கி கொடுத்ததாகவும் முருகன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முருகனுக்கு திருச்சி கொள்ளிடம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததிலும் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கிலும் முருகனை போலீசார் கைது செய்தனர். வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய நகை, பணத்தை மீட்பதற்காக முருகனை 7 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு கொள்ளிடம் போலீசார் ரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி கடந்த 8ம் தேதி மதியம் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி முருகன் போலீஸ் பாதுகாப்புடன் ரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில் முருகனை 6 நாள் கஷ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரை விசாரிக்க போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டின்அருகில் புதைத்து வைத்த மேலும் ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர். கஷ்டடி முடிந்த நிலையில் நேற்று 13ம் தேதி மாலை ரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு, முருகனை மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்க நீதிபதி சிவகாமசுந்தரி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பெங்களூர் அழைத்துச்சென்றனர்.

Related Stories: