அடிப்படை வசதி செய்து தராத பட்டுக்கோட்டை நகராட்சியை கண்டித்து திமுக, பொதுமக்கள் சாலை மறியல்

பட்டுக்கோட்டை, ஜன. 14: அடிப்படை வசதி செய்து தராத பட்டுக்கோட்டை நகராட்சியை கண்டித்து திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 30, 31, 32, 33 ஆகிய 4 வார்டுகளை உள்ளடக்கிய கரிக்காடு பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து திமுக மற்றும் சம்மந்தப்பட்ட வார்டு பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் சாலையில்கரிக்காட்டில் பாரதி சாலை அருகில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், திமுக மாவட்ட, நகர, இளைஞரணி, மாணவரணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்துக்க வந்து போராட்டம் நடத்திய திமுகவினரிடம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி விட்டு தற்போது சாலை மறியல் செய்தால் எப்படி என்று கேட்டனர். அதைதொடர்ந்து பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நகராட்சி ஆணையர் வந்து உத்தரவாதம் கொடுத்தால் தான் நாங்கள் இந்த சாலை மறியலை கைவிடுவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு இன்ஸ்பெக்டர், நான் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கிறேன், நீங்கள் சாலை மறியலை கைவிட்டு சாலை ஓரமாக நில்லுங்கள் என்று கூறினார். உடனே திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆணையர் வருகைக்காக சாலையோரத்தில் நின்றனர்.

பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், நகராட்சி ஆணையர் சார்பில் மேலாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கஜா புயல் வந்து ஓராண்டுக்கு மேலாகியும் நாங்கள் இன்னும் சீரழிகிறோம். 10 ஆண்டுகளாக சாலை சரிசெய்யவில்லையென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கோரிக்கைகளில் சுட்டி காட்டிய இடங்களை தாசில்தார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அதைதொடர்ந்து குடிநீர் மற்றும் தெருவிளக்கு சம்மந்தமாக ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும், சாலை வசதிகள் சம்மந்தமாக எந்தெந்த சாலைகள் என்று ஆய்வு மேற்கொண்டு அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் சாலை வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் சாலையில் அரை மணி நேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போராட்டம் நடத்திய நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் 10 பேர் என மொத்தம் 11 பேர் மீது எவ்வித முன்னறிவிப்பின்றி கரிக்காடு பகுதியில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொது இடத்தில் ஒன்றுகூடி போக்குவரத்துக்கும். பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : DMK ,Pattukkottai ,facilities ,
× RELATED 2 வாரமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்