வி.களத்தூர் மில்லத் நகர் பகுதிக்கு தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்

பெரம்பலூர், ஜன. 14: வி.களத்தூர் மில்லத் நகர் பகுதிக்கென தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் பகுதியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி நகர செயலாளர் சித்திக் பாஷா உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் நாங்கள் வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 2வது வார்டில் 1,033 வாக்காளர்கள் மற்றும் 8வது வார்டில் 445 வாக்காளர்கள் என மொத்தம் 1,478 வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் 800 ரேஷன் கார்டுகள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியோர் மற்றும் பெண்கள் மில்லத் நகரில் இருந்து வண்ணாரம் பூண்டி வரை சென்று ரேஷன் பொருள் வாங்கிவர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் முதியோர் கோரிக்கைகளை ஏற்று மில்லத் நகர் பகுதிக்கென தனியாக ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : Ration Shop ,Valartur Millat Nagar Area ,
× RELATED அரூர் பழையப்பேட்டையில் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை