×

வாழை இலைக்கு தேவை அதிகரிப்பு எதிரொலி மானிய விலையில் உரம் கிடைக்க உரிய நடவடிக்கை

கரூர், ஜன. 14: வாழை இலைக்கு வரவேற்பு அதிகமாக உள்ளதால் மானிய விலையில் உரம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. இதனால் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கேரி பேக்குகள் ஓட்டல்கள், பேக்கரி, டீ ஸ்டால்கள், பலகார கடைகள், கையேந்தி பவன்கள், பிரியாணி உள்ளிட்ட அசைவ கடைகள், இறைச்சிக்கடைகளில் பயன்படுத்தப்படுவதில்லை, கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலைகள் பயன்படுத்தப்படுகிறது. திருமணம், அன்னதானம் போன்றவற்றிலும் உணவு பரிமாற வாழை இலையை பயன்படுத்துகின்றனர்.  இதனால் வாழை இலையின் தேவை அதிகரித்து விட்டது. மார்க்கெட்டுகளில் வாழை இலை கட்டு ஒன்றுக்கு சுமார் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒருகட்டில் 200 இலைகள் கொண்டதாக இருக்கும். பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த பின்னர் இதன்விலை அதிகரித்து ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனை விலையில் சாப்பாட்டு இலை ரூ.5, டிபன் இலை ரூ.3, தட்டு இலை ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதனால் வாழை பயிரிடும் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுவதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், காவிரி பாசன பகுதியில் குறிப்பாக கட்டளை மேட்டுவாய்க்கால் நீர்பாசனத்தில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டது. வறட்சி நிவாரணமும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. காவிரி கரைபுரண்டு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டும் கரூர் மாவட்ட காவிரி கடைமடை பகுதிக்கு உரிய நீர் வந்து சேரவில்லை. எனினும் இருக்கும் நீரை பயன்படுததி வாழை பயிரிட்டு வந்தோம்.கடந்த சிலமாதங்களாக காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து இருக்கிறது. வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வாய்க்கால் கிணற்றுப்பாசன நீரை கொண்டு வாழை அதிக ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. உரிய நீர் கிடைக்கவும், மானிய விலையில் உரம் கிடைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்