×

எண்ணூரில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு: பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர்:  எண்ணூர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம், எர்ணாவூர் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பாரிமுனை, கோயம்பேடு, பூந்தமல்லி, வேளச்சேரி போன்ற  பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க சென்று வருகின்றனர்.   இந்நிலையில் எண்ணூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி அலுவலர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என பலரும் பேருந்திற்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு சரியான நேரத்திற்கு போக முடியாமல் சிரமப்படுகின்றனர். நீண்ட நேரத்திற்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசலில் சிரமத்துடன் பயணிக்கும் நிலையும் உள்ளது.எனவே, எண்ணூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று  பலமுறை பொதுமக்கள் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  ‘‘எண்ணூரில் இருந்து எர்ணாவூர் மற்றும் தாழங்குப்பம் வழியாக வழியாக இயக்கப்பட்ட பல மாநகர பேருந்துகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் குறைத்து விட்டனர். இதனால், தினசரி பீக் அவர்சில் பேருந்திற்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள், மாணவர்கள் பெரும்  சிரமப்படுவதோடு வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவ மாணவியர், அலுவலகங்கள் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்து விட்டோம். ஆனால்  எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே குறைந்தபட்சம் அலுவலக நேரத்திலாவது  மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன், ரூ.61...