×

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் மாநகராட்சியில் 64 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நடந்த சிறப்பு முகாம் மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த 64 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2020ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, 2020ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 88 ஆயிரத்து 673. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,03,999 வாக்காளர்களும் உள்ளனர்.

இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்டவைகள் மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் மூலம் 64 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பெயர் சேர்க்க 49 ஆயிரத்து 674 பேரும், பெயரை நீக்க 767 பேரும்,  திருத்தம் செய்ய 5159 பேரும், பெயரை இடமாற்றம் செய்ய 8600 பேர் என்று மொத்தம் 64 ஆயிரத்து 260 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். இந்த சிறப்பு முகாம் வாய்ப்பை தவற விட்டவர்கள் வருகிற 22ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அளித்தவர்களின் மனுக்கள் வீடு வீடாக சென்று பரிசீலிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தொடர்ந்து, இவர்களின் பெயர்கள் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியிலில் சேர்க்கப்படும்.

Tags : camp corporation ,
× RELATED 9, 10ம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு