×

நாகை மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது

நாகை. ஜன.14: உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பொங்கலிட்டு கரும்பு, காய்கறி உள்ளிட்டவற்றை சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். தமிழகத்தில் நடக்கும் பண்டிகைகளில் 3 நாட்கள் ஒரே விழா பொங்கல் பண்டிகை மட்டும்தான். நகர்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடுகின்றனர். வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று வாழும் மக்களும் பொங்கல் விழாவை கொண்டாட தங்களது சொந்த ஊர்வந்து பொங்கல் வந்து வழிபடுவதி தனிச்சிறப்பாக கொண்டுள்ளனர். இந்த விழாவையொட்டி முதல்நாளில் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவர். அப்போது இனிப்பு மற்றும் வெண் பொங்கல் செய்து வழிபடுவர். இரண்டாவது நாள் விவசாய பணிக்கு உழவுக்கு வித்திட்ட காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் நல்லநேரம் அடுப்பு செய்து மண்பானையில் பொங்கல் வைத்து, அனைத்து வகையான காய்களை கொண்டு கூட்டு செய்து பட்டி முன்பு செங்கரும்புகளை நட்டு, இலையில் பொங்கலிட்டு படைத்து அதனை காளைகளுக்கு ஊட்டி “பட்டிப்பெருக பால்பொங்கல் பொங்க பொங்கலோ பொங்கல்’’ என்ற கோஷத்துடன் அனைவரும் குதூகலத்துடன் வழிபடுவர்.

பின்னர் குடும்பத்துடன் பொங்கலை உண்டு மகிழ்வர். மறுநாள் கரிநாள் என்பதால் அன்றைய தினம் காளைகளுக்கு நெட்டிமாலை அணிவித்து நெற்றியிலும் குங்குமம் மற்றும் மஞ்கள் வர்ணம் பூசி மதியத்திற்கு மேல் அனைத்து கிராமங்களிலும் உள்ள மந்தைவெளியில் காளைகளை ஒன்றாக சேர்த்து அவிழ்த்து விட்டு மஞ்சள் நீராடி மகிழ்வர். அன்றைய தினம் அனைவரது வீடுகளில் அசைவ சாப்பாடு கமகமக்கும்.இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாளை துவங்க உள்ள நிலையில் நாகையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவை அதிகரித்துள்ளது. புதுமண தம்பதியினருக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே அவற்றின் வரத்தும், விற்பனையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாகை கடைத்தெரு, பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே கரும்பு தோட்டங்கள் உதயமானது போல் லாரிகளில் கரும்பு கட்டுகளை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனைக்காக இறக்கி வைத்துள்ளனர். மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்களும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளின் மூலம் கரும்புகளை கட்டுக்கட்டாக நாகைக்கு விற்பனைக்காக கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அதிகமாக இருந்தாலும் 10 கரும்புகள் இருக்கும் ஒரு கட்டு ரூ.250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய அளவிலான கரும்புகள் இருக்கும் கட்டு ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கரும்பின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல மஞ்சள், இஞ்சி ஆகிய அடங்கிய ஒரு கொத்து ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விற்பனை நாகை நகர் பகுதியில் கலைகட்ட தொடங்கியுள்ளது. மேலும், கிராமப்புற மக்கள் பொங்கலுக்கு புத்தாடை அணிந்து விழாவை விரும்பு கொண்டாடுவதால் ஜவுளிக்கடைகளிலும் கூட்டும் நிரம்பி வழிகிறது. நாகை நகர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் கரும்பு கட்டுகள், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள் குவிந்துள்ளது.

Tags : district ,Nagai ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் சமூக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு