பொங்கல் விழாவையொட்டி திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுமா?

மயிலாடுதுறை, ஜன.14: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூரில் வருடாவருடம் பொங்கல் நிகழ்ச்சி என்ற பெயரில் மாடுகள், குதிரைகள் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு அரசு உத்தரவை மீறி திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது, அப்பொழுதைய ஆர்.டி.ஓ. அனுமதி மறுத்திருந்த நிலையிலும் ஆளுங்கட்சி ஆதரவுடன் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றாலும் போட்டி நடைபெற்று முடிந்ததும் பொறையார் போலீசார் போட்டி நடத்திய 50 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. சென்ற ஆண்டு நடைபெற்ற ரேக்ளா ரேஸ் பந்தயத்தில் பங்கேற்ற காளைமாடு காழியப்பநல்லூரை சேர்ந்த ராமச்சந்திரன்(50) என்பவரை குத்தியதால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் இதுநாள் வரை அவரது குடும்பத்தினரை கண்டுகொள்ளவில்லை. இந்த ரேக்ளா ரேஸ் சமயத்தில் பல்வேறு விதிமீறல்களும் கால்நடைகள் வதைபடுவதும், பொதுமக்கள் தொல்லைக்குள்ளாவதுடன், தனியார் இந்த போட்டி குறித்து வசூல் வேட்டையில் இறங்கி பணம் பார்க்கின்றனர்.

இதுபோன்ற போட்டிகளை தனியார் நடத்த அனுமதிக்கக் கூடாது, அதை வரைமுறைப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கறிஞர் சங்கமித்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதற்கு முன் அவர் அனைத்துத் துறையினருக்கும் அளித்த புகாரின் அடிப்படையில் நாகை கலெக்டர் திருக்கடையூரில் தேசிய நெடுஞ்சாலையில் தனி நபர்களால் நடத்திவரும் ரேக்லா ரேஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தச் சொல்லியுள்ள கோரிக்கை மனுமீது நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு பதில் அளிக்க கோரியிருந்தார். நேற்று திருக்கடையூரை சேர்ந்த ரேக்ளா ரேஸ் போட்டி நடத்தும் குழுவினர் ஒன்று திரண்டு மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கடந்த 47 ஆண்டுகளாக இந்த ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. பாரம்பரிய விழாப்போல இந்த விழாவும் நடைபெறுவதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 75 ஆயிரம் பேர் கூடுகின்றனர். ஆகவே இந்த விழா நடத்த அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டிருந்தனர். சென்ற ஆண்டு விழா நடத்த அரசு அனுமதி அளித்திருந்ததா என்று கேட்டதற்கு, சென்ற ஆண்டு தரவில்லை ஆனால் ஓரலாக சொல்லிவிட்டார்கள் அதன் அடிப்படையில் ரேக்ளாரேஸை சிறப்பாக கொண்டாடினோம்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய தலைவர்கள் இந்த போட்டியை நடத்த ஆர்வமாக இருப்பதால் இதற்கு முன்பு ஒற்றுமையாக நடத்தினர், அதே போன்று இந்த ஆண்டும் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். மேலும் போட்டியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக ரூ.3 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றனர். விழாவிற்காக அச்சடித்து வசூல் செய்யும் நோட்டீசை ஆர்டிஓவிடம் அளித்தனர். நான் விசாரணை செய்து முடிவை தெரிவிக்கிறேன் என்றார். இதற்கிடையே பொதுநல வழக்கறிஞர் சங்கமித்திரன் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அதன் விபரம் இன்று தெரியவரும்.

Tags : race ,festival ,Thirukkadur ,Pongal ,
× RELATED ரேக்ளா ரேஸ் காளைகளுக்கு பயிற்சி