×

பாண்டிச்சேரியில் இருந்து பிணமாக கொண்டு வந்தனர் குமரி மின் வாரிய ஊழியர் சாவில் மர்மம் தந்தை பரபரப்பு புகார்

நாகர்கோவில், ஜன.14: குமரி மாவட்டத்தை சேர்ந்த மின் வாரிய ஊழியர், மர்மமான முறையில் இறந்ததாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தோப்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அப்பாத்துரை. இவர் நேற்று மாவட்ட  எஸ்பியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : எனக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 2வது மகன் சிவராம் சிங் (45). நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள மாதகம் பகுதியில் மின்வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.  எனது மருமகள் சுஜாதா (42), சீர்காழி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமீப காலமாக எனது மகனுக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நாங்கள் சமாதானம் செய்து வந்தோம். கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போனில் பேசிய எனது மகன் சிவராம் சிங்,  கடந்த 3 நாட்களாக நான் வீட்டுக்கு செல்ல வில்லை. என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறினான். நான் அவனை சமாதானம் செய்தேன்.

இந்த நிலையில் மருமகள் என்னை போனில்தொடர்பு கொண்டார். சிவராம் சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டு பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த, எனது பேரனை அனுப்பி நிலைமை குறித்து விசாரிக்க கூறினேன். இதற்கிடையே இன்று (நேற்று) காலை பாண்டிச்சேரியில் இருந்து தனியார் ஆம்புலன்சில் எனது மகனை கொண்டு வந்தனர். ஊருக்கு வரும் போது எனது மகன் இறந்து இருந்தான். அவனது உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. அவனை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். சம்பவம் நடந்த இடம், சீர்காழி அருகே என்பதால் அங்குள்ள போலீசாரிடம் இது குறித்து விசாரித்த பின்னரே மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் கூறி உள்ளனர். தற்போது சிவராம்சிங், உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari Electrical Board ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி