×

குமரி எஸ்.ஐ. சுட்டுக்கொலை வாடகைக்கு வீடு எடுத்து சதி திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் மர்ம பையில் இருந்தது என்ன? திடுக் தகவல்கள்

நாகர்கோவில், ஜன.14: குமரி எஸ்.ஐ. சுட்டுகொலையில் போலீஸ் தேடி வரும் தீவிரவாதிகள் நெய்யாற்றின்கரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இவர்கள் கையில் வைத்திருந்த பையில் இருந்தது என்ன? என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் (57) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஜிபி திரிபாதியும் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் இந்து இயக்க தலைவர்களை கொல்ல முயன்றதாக வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும், கேரளாவில் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தலைமறைவாக உள்ள  இவர்கள் இருவரையும் பிடிக்க  குமரி மாவட்ட  எஸ்.பி. நாத் தலைமையில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள போலீசார் மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு படை போலீசாரும்,  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருவர் குறித்தும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 7 லட்சம்  சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. கேரள அரசும் சன்மானம் அறிவித்துள்ளனர். கடந்த 6  நாட்களில் 100 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தும் கொலையாளிகள் சிக்க வில்லை. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக களியக்காவிளை அடுத்துள்ள கேரள மாநிலம் பாறசாலை முதல் திருவனந்தபுரம் வரை பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கொலையாளிகள் இருவரும் குமரி - கேரள எல்லையான நெய்யாற்றின்கரை பகுதியில் சுற்றி திரிந்ததற்கான வீடியோ காட்சிகள் சிக்கின. கடந்த 8ம் தேதி இரவு சப் இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டு கொன்றனர். அதற்கு முதல் நாள், அதாவது 7ம் தேதி நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள கோயில் அருகே சாலையில் நடந்து செல்கின்றனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் செல்கின்றனர். இதே போல் 8ம் தேதி காலையிலும் அந்த பகுதியில் நடமாடியதற்கான வீடியோ காட்சிகள் உள்ளன. 8ம் தேதி பொது வேலை நிறுத்தம் என்பதால், அன்றைய தினம் கடைகள் திறக்கப்பட வில்லை. பஸ்கள் ஓடாததால் ஆட்டோவில் பயணிக்கின்றனர். இவர்கள் பயணம் செய்த ஆட்டோவை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

அந்த ஆட்டோ டிரைவரிடமும் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் நெய்யாற்றின்கரை பகுதியில் ஒரு குடியிருப்பு பகுதியில் இவர்கள் இறங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் விசாரித்த போது,  அப்துல் சமீம் மற்றும்  தவுபிக் ஆகியோர் நெய்யாற்றின்கரை பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.  இவர்களுக்கு திருவனந்தபுரம் விதுரா பகுதியை சேர்ந்த சையது அலி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார். கடந்த 7, 8 ம் தேதிகளில் இந்த வீட்டில் தான் இருந்துள்ளனர். அப்போது இவர்களின் கூட்டாளிகளுடன் ரகசிய ஆலோசனையும் நடத்தி உள்ளனர். கொலைக்கான சதி திட்டத்தை இந்த வீட்டில் இருந்து தான் தீட்டி உள்ளனர் என போலீசார் கூறுகிறார்கள்.  கொலை செய்து விட்டு எப்படி தப்பி செல்ல வேண்டும். எங்கு தலைமறைவாக இருக்க வேண்டும் என்பது வரை இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு முடிவு செய்து அதன் பின்னரே கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்ததாக சையது அலி என்பவரை தேடி வருகிறார்கள். அவரும் கடந்த 8ம் தேதியில் இருந்து தலைமறைவாகி இருக்கிறார். பெங்களூரில் இவர்களது கூட்டாளிகள் 3 பேரை 6ம் தேதி நள்ளிரவில் தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்கிறார்கள். 7ம்தேதி இந்த தகவல் தெரிகிறது. இதற்கு பழி வாங்கவே இவர்கள் தமிழகத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரை கொல்ல சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது.

 ஏற்கனவே தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை செய்து இருந்தது. கேரள தீவிரவாத தடுப்பு படையிடம் சிக்கியவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் சதி வேலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் வைத்திருந்த மர்ம பையில் இருந்தது வெடிகுண்டாக இருக்கலாமா? அந்த மர்ம பை எங்கு சென்றது என்பதில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.

Tags : terrorists ,house ,
× RELATED ஜம்மு-காஷ்மீரின் குல்காம்...