×

இன்று போகி பண்டிகை குமரி பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாகர்கோவில், ஜன.14:  குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில்  பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து இதில் பங்கேற்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று (14ம்தேதி) போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் போகி பண்டிகையின் நோக்கம் ஆகும். போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை குப்பையில் போட்டு எரிப்பவர்கள், சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். டயர்கள், பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறி உள்ளார்.

பொங்கலையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. ஒழுகினசேரியில் உள்ள அப்டா மார்க்கெட், வடசேரி சந்தை உள்பட மாவட்டம் முழுவதும் கரும்பு வியாபாரம் களை கட்டி உள்ளது. பனங்கிழங்குகள், காய்கறிகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குமரி மாவட்டத்தில் குவிந்துள்ளனர். பொங்கல் பொருட்கள் வாங்க, நேற்று காலை முதல் வடசேரி, அப்டா மார்க்கெட் உள்ளிட்ட கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி, கல்லூரிகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டின. நாகர்கோவிலில் உள்ள கோட்டார் குமரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில்  ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இளங்கடை அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் ஹரிக்குமார், ஜெயசந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் சுவாமி அய்யனார், பட்டாரியர் சமுதாய தலைவர் முத்து வைரவன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெனாசிர் பானு உள்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் தலைமை ஆசிரியர் தயாபதி நளதம், உதவி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதே போல் ஹோலிகிராஸ் கல்லூரி, இந்து கல்லூரி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து மகிழ்ச்சியுடன்  நடனமாடி மகிழ்ந்தனர்.

1500 போலீஸ் பாதுகாப்பு :பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் மற்றும் மறுநாள் காணும் பொங்கல் என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் உள்ளதால், சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. இது குறித்து எஸ்.பி. ராஜராஜன்  (பொறுப்பு) உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கன்னியாகுமரி உள்பட சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

Tags : celebration ,Pongal Festival ,College ,Bogey Kumari School ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...