ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க 5 கிராம மக்கள் எதிர்ப்பு விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம்

ஆம்பூர், ஜன.13: ஆம்பூர் அருகே சோலூரில் கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என 5 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த சோலூரில் வண்ணாந்துறை, சோலூர், கல் உடைப்போர் காலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கான குடிநீர் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. மேலும், 5 கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வாழை, தென்னை, நெல், சோளம் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பலர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதே பகுதியில் தமிழக வனத்துறையினரால் கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளை அப்பகுதியினர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைத்து முதலமைச்சரின் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரங்கள் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் தனியார் சார்பாக கல்குவாரி மற்றும் கல் உடைக்கும் இயந்திரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாவும், கல் குவாரி இந்த பகுதியில் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள், கிராம குடிநீர் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிப்படையும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கல்குவாரிக்கு மிக அருகாமையில் சுமார் 350 மீட்டர் தொலைவில் நரிகுறவர்களுக்கான தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டி தரப்பட்டும், கட்டப்பட்டும் வருகிறது. மேலும், இதே பகுதியில் அப்பகுதியில் வசித்து வரும் குழந்தைகளுக்கான பள்ளி இயங்கி வருகிறது.

மேலும், முதல்வர் உத்தரவின் பேரில் இப்பகுதியில் தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றுள்ள நிலையில் குவாரி அமைக்க கூடாது என பழைய சோலூர், ராஜ கோபால் நகர், வண்ணாந்துறை, சாணாங்குப்பம், நமாஸ் மேடு, கல் உடைப்போர் காலனி உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து கல்குவாரி அமைப்பதை தடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவிக்கையில்,` கடந்த சில ஆண்டுகளூக்கு முன்னர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அப்போதைய திருப்பத்தூர் சப்-கலெக்டர் ஷில்பா பிரபாகர் அனுமதி தர மறுத்தார். இதுகுறித்து பலமுறை மாசு கட்டுபாட்டு வாரியம், வருவாய் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல் குவாரி அமைக்க உள்ள இடத்திற்கு அருகாமையில் எந்த வித குடியிருப்பும் இல்லை என அப்பகுதியில் பணிபுரிந்த விஏஓ, உரிய ஆய்வு செய்யாமல் பரிந்துரை செய்துள்ளார். இது கண்டிக்கதக்கது. பல்வேறு கிராம மக்களின் ஆதாரமாக திகழும் குடிநீர் போர்வெல் மற்றும் விவசாயநிலங்கள் இதனால் பெருமளவு பாதிக்கப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்றார்.

Related Stories: