வேலூர் மத்திய சிறை காவலர் குடியிருப்புகளில் வீடுகளை தூய்மையாக பராமரிக்காத 219 காவலருக்கு நோட்டீஸ் ஆய்வு செய்த சிறை கண்காணிப்பாளர் அதிரடி

வேலூர்: வேலூர் மத்திய சிறை காவலர் குடியிருப்புகளில் சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தபோது வீடுகளை தூய்மையாக பராமரிக்காத 219 காவலர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், 12 பார்ஸ்டல் சிறைகள், 5 துணை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள், 2 திறந்தவெளி சிறைகள் உள்ளன. இதில் சிறைக்காவலர்களின் பணிப்பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்க குடும்பத்துடன் அவர்கள் பொங்கல் கொண்டாடுவதற்கான சூழலை அரசு உருவாக்கியுள்ளது. குறிப்பாக 9 மத்திய சிறைகளில் பணியாற்றும் சிறைக்காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மத்திய சிறைக்கும் தலா ₹50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சிறைகளில் புதுக்கோட்டை சிறைக்கு மட்டும் ₹25 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் சிறைக்காவலர்கள் கூட்டாக தங்கள் குடும்ப உறவுகளுடன் பொங்கல் கொண்டாடலாம்.

மேலும், சிறை காவலர் குடியிருப்புகளில் காவலர்களின் குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குடியிருப்புகளை சிறைத்துறை டிஐஜி, சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்து வீடுகளை தூய்மையாக வைத்திருக்கும் காவலர்களுக்கு எல்இடி டிவி பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சிறை காவலர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. வேலூர் மத்திய சிறை காவலர் குடியிருப்பில் சுற்றறிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் நேற்று முன்தினம் காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, 8 குடியிருப்புகளில் உள்ள 230க்கும் குடியிருப்புகளில் பெரும்பாலான வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தூய்மை இல்லாமல் குப்பைகள் சேர்ந்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்காணிப்பாளர் ஆண்டாள் வீடுகளை தூய்மையாக பராமரிக்காத 219 காவலர்களுக்கு ‘17 பி’ நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். இச்சம்பவம் சிறைக்காவலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: