மத்திய அரசு சார்பில் நடந்த ஆய்வில் வேலூர் மாவட்டத்தில் 5,475 பேருக்கு காச நோய் பாதிப்பு தொடர் சிகிச்சைகள் அளிக்கும் பணி தீவிரம்

வேலூர், ஜன.13: மத்திய அரசு சார்பில் நடந்த ஆய்வில் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 5,745 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான தொடர் சிகிச்சைகள் அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காசநோய் பிரிவு துணை இயக்குனர் பிரகாஷ் ஐயப்பன் தெரிவித்தார். மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வரும் 2025ம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பெருநகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், என்று உத்தரவிட்டது. இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வகக்கூடம், எக்ஸ்ரே இயந்திரம் மற்றும் முதலுதவி சிகிச்சைகளுக்கான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திற்கென ஒரு ஆய்வுக்கூட வாகனம் மற்றும் எக்ஸ்ரே இயந்திரம் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் காசநோய் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களிலும் காசநோய் கண்டறியும் பணி மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நடந்த காசநோய் கண்டறியும் சிறப்பு முகாமை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் தலைமையில் 27 டாக்டர்கள் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் காசநோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று காசநோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதில், 5 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 5,745 பேருக்கு இதுவரை காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து காசநோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரை காசநோய் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,807 பேருக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் மூலமாக 1,668 பேருக்கு என மொத்தம் 5,745 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் நடந்த காசநோய் கண்டறியும் சிறப்பு முகாமில் 90 பேருக்கு காசநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சத்தான உணவுகளை உட்கொள்ளும் விதமாக மாதந்தோறும் ₹500 உதவித்தொகையானது சிகிச்சைபெறும் காலம் வரை வழங்கப்படும். 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், காசநோய் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசநோய் தடுப்பு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக காசநோய் பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து முழுமையாக ஒழிக்க முடியும். 2025ம் ஆண்டிற்குள் நாட்டில் காசநோய் பாதிப்பில்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாருக்கு காசநோய் பாதிப்பு ஏற்படும்

சர்க்கரை நோய், மதுபழக்கம், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு காசநோய் எளிதாக பாதிக்கும். இதில், எலும்பு, மூளையில் காசநோய் பாதித்தால் மற்றவர்களுக்கு பரவாது. ஆனால், நுரையீரலில் ஏற்படும் காசநோய் பாதிப்பு மற்றவர்களுக்கு பொது இடங்களில் எச்சில் உமிழ்தல், இரும்புதல் போன்ற காரணங்களால் எளிதில் பரவும்.

காசநோய் அறிகுறிகள்

தொடர் இருமல், திடீர் எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், நெஞ்சுவலி, இருமும்போது சளியுடன் ரத்தம் கலந்து வருதல் போன்ற காரணங்களால் காசநோய் பாதிப்பு ஏற்படும். இதற்கென அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகள் உள்ளது. சிபிஎன்ஏஏடி நவீன ஆய்வக கருவியின் உதவியுடன் காசநோய் பாதிப்பை இரண்டு மணிநேரத்தில் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்கலாம். எனவே காசநோய் குறித்து அச்சப்பட தேவையில்லை. அரசு மருத்துவமனையில் காசநோய் தடுப்பு பிரிவு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டுவந்தால் காசநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

Related Stories: