×

எஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு; 5417 பேர் எழுதினர்

சேலம், ஜன.13: சேலம் மாவட்டத்தில் 6 மையங்களில் நடந்த எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை 5417 பேர் எழுதினர். தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை குழுமம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதை தவிர்த்து 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் காவல்துறையில் பணிபுரிபவர்களும்விண்ணப்பத்தினர். இந்நிலையில், பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்தவு மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் எஸ்.ஐ., எழுத்து தேர்வுக்கு 7170 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று 6 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. முன்னதாக, தேர்வு மையத்துக்கு வந்தவர்களை வரிசையாக போலீசார் நிற்க வைத்து, ஒவ்வொருவரிடம் ஹால் டிக்கெட்டை வாங்கி சரி பார்த்தனர்.

பின்னர் சோதனைக்கு பிறகே மையத்திற்குள் அனுமதித்தனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி, 12.30 மணிக்கு முடிந்த பிறகு அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை 4763 ஆண்களும், 654 பெண்களும் என மொத்தம் 5417 பேர் எழுதினர். 1485 ஆண்களும், 268 பெண்களும் என மொத்தம் 1753 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எஸ்பி தீபாகனிக்கர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 560 பேர் எழுதுகின்றனர். இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு உடற்தகுதி தேர்வு நடக்கிறது. அதிலும் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : SI ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ