கடம்பூர் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

கெங்கவல்லி, ஜன.13:கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கிராம நிர்வாக அலுவலர் துரை தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் செல்வம் வரவேற்றார். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையுடன் பங்கேற்றனர். கடம்பூர் ஊராட்சி கிராம தூய்மை பணியாளர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் செல்வம் பாதபூஜை செய்து நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் பள்ளி மேலாண்மைக் குழுவினர், வறுமை ஒழிப்பு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பொங்கல் வைத்து, பசுவிற்கு பூஜை செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.  தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மீனாம்பிகா தலைமையில் நடைபெற்றது. பேரணியில், பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்,  பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம் போன்ற பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். அதை தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி மீனாம்பிகா பரிசு வழங்கினார்.

Related Stories: