கொத்தாம்பாடியில் ஊராட்சி துணைத்தலைவர் வீட்டை பெண்கள் முற்றுகை

ஆத்தூர், ஜன.13:கொத்தாம்பாடி கிராம ஊராட்சி துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டவர் வீட்டை முற்றுகையிட்டு, பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் ஒன்றியம் கொத்தாம்பாடி கிராம ஊராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல், நேற்று முன்தினம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது இளையராஜா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தவுடன், மீதமிருந்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒருதரப்பினர் தாக்கி, அலுவலகத்தை விட்டு வெளியில் தூக்கி சென்றனர். இதனால், அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா உட்பட 6 பேர் காயமடைந்தனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், வார்டு உறுப்பினர்களில் சிலரை காரில் ஏற்றி சென்றனர். இதனால், ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, இளையராஜாவை துணைத்தலைவராக தேர்வு செய்து தேர்தல் அலுவலர் பரிமளா அறிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், மீண்டும் தேர்தல் நடத்த கூறி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட செய்தனர். இந்நிலையில், நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்கள், துணைத்தலைவராக அறிவிக்கப்பட்ட அழகாபுரம் காலனியில் உள்ள இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, முற்றுகை கைவிடப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தின் துணை தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். தேர்தலின்போது வன்முறை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அழைத்து செல்லப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும்,’ என்றனர்.

Related Stories: