×

திருப்போரூர் பேரூராட்சியில் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிய சுடுகாடு: சடலம் கொண்டு செல்வதில் சிரமம்

திருப்போரூர், ஜன. 13: திருப்போரூர் பேரூராட்சியில் முறையான பராமரிப்பு இல்லாமல் மயானம் புதர்மண்டி கிடப்பதால் சடலங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே மயானத்தை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருப்போரூர் பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய மூன்று கிராமங்களிலும் தலா 2 மயானங்கள் வீதம் மொத்தம் 6 மயானங்கள் உள்ளன. இவற்றை திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

இவற்றில் திருப்போரூர் கிராமத்தின் பிரதான மயானம் சுமார் 2 ஏக்கர் 69 சென்ட் பரப்பளவு கொண்டது. இந்த மயானத்தை சுற்றிலும் மதில்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று இடங்களில் எரிமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயானத்தின் பாதுகாவலர் பணியிடம் தற்போது காலியாக உள்ளதால் மயானத்தின் இரு பக்க கதவுகளும் எப்போதும் திறந்தே கிடக்கின்றன. இதன் காரணமாக கழிவுநீர் லாரிகள் மயானத்தின் உட்பகுதிக்கு வந்து கழிவுநீரை கொட்டி விட்டு செல்கின்றன.

மேலும், மயானத்தின் உள்ளே சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள் என புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சடலங்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் யாரேனும் இறக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் கூலியாட்கள் வைத்து மயானத்தை சுத்தம் செய்த பிறகே சடலங்களை கொண்டு செல்ல முடிகிறது. இந்த மயானத்தின் உள்ளே காத்திருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு இரவு, பகல் பாராது 24 மணி நேரமும் குடிமகன்கள் தஞ்சமடைந்து மது அருந்தி வருகின்றனர். மேலும் மயானத்தில் சட்ட விரோதச்செயல்களும் அரங்கேறி வருவதாக சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஆகவே திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் திருப்போரூர் மயானத்தை பாதுகாக்கும் வகையில் முட்புதர்களை அகற்றி நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மேலும் பாதுகாவலர் நியமித்து மயானத்தின் இரண்டு கதவுகளையும் பூட்டி பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் சடலங்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வருபவர்கள் முன்கூட்டியே பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெற்ற பிறகே வர வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள மயானத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் காடுபோல் செடி, கொடிகள் வளர்ந்து யாரும் நடமாட முடியாதபடி உள்ளது. இவ்வாறு இருப்பதால் குடிகாரர்கள் தங்களது புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் சடலங்களை எடுத்து வருவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மயானத்தை உடனே சீரமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர். இப்பகுதியில் யாரேனும் இறக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் கூலியாட்கள்  வைத்து மயானத்தை சுத்தம் செய்த பிறகே சடலங்களை உள்ளே கொண்டு செல்ல முடிகிறது.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...