பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகரில் 20ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

திருச்சி, ஜன.13: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும், திருச்சி மாநகரில் நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் கீழ்கண்ட தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது. இதையொட்டி திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையத்தை மாநகர போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ராமநாதன், உதவி ஆணையர்கள் விக்னேஸ்வரன், அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் தஞ்சாவூர் மார்க்கம் செல்லும் பஸ்கள் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்து இயக்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கம் செல்லும் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானாவிலிருந்து இயக்கப்படவுள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.    மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம்போல மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பஸ் நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சுற்றுப்பேருந்துகள் இயக்கவும், அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் தகுந்த காவல்துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: