ஜல்லிப்பட்டி ஊராட்சியில் ஓடையை ஆக்கிரமித்திருந்த கருவேல மரங்கள் வெட்டி அகற்றம்

உடுமலை, ஜன. 13: உடுமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டியில் பெரிய ஓடை ஒன்று உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து, இந்த ஓடை வழியாக சென்று தினைக்குளத்தில் கலக்கிறது. இந்த ஓடை சுமார் 4 கிமீ., நீளம் கொண்டது.கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இல்லாததால், இந்த ஓடையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் படையெடுத்ததால் ஓடை அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் இருந்தனர். மழைக்காலங்களில் நீர்வரத்தும் பாதிக்கப்பட்டது.

சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஜல்லிப்பட்டி ஊராட்சி தலைவராக பதவிஏற்ற சாமிநாதன், துணைத்தலைவர் சம்பத் ஆகியோர் சீமை கருவேல மரங்களை வெட்ட உடனடி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, ஓடையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை ஜேசிபி மூலம் வெட்டி அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Related Stories: