சைனிக் பள்ளியில் விளையாட்டு விழா

உடுமலை,ஜன.13:  உடுமலை அருகே உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 58வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்திய கப்பல்படைத் துணைத்தளபதி வைஸ் அட்மிரல் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாணவர்கள் குடை நடனம், ஏரோபிக் நடனம், பல்வேறு வடிவங்களில் அணிவகுப்பு, காலில் கட்டையை கட்டிக்கொண்டு நடத்தல், தீ வளையத்தில் பாய்ந்து செல்தல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.கல்வியாண்டு முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற பல்லவர் இல்லத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.

துணைத்தளபதி அசோக்குமார் பேசுகையில், ‘‘நல்ல பண்புகளையும், ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, நல்ல ஆளுமை மிக்க மனிதர்களாக தங்களை உருவாக்கி பாதுகாப்பு துறையில் பணியாற்ற வேண்டும்,’’ என்றார். முன்னதாக கம்ப்யூட்டர் அறையை திறந்து வைத்தார்.மாணவர்களின் மனமகிழ் மன்ற கண்காட்சியை கப்பல் படை மகளிர் நல கூட்டமைப்பின் தலைவர் கீதா திறந்து வைத்து பார்வையிட்டார். பள்ளியின் முதல்வர் ஏர்கமோடர் சிதானா ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லெப்.கர்னல் அமித்குர்குரே, துணை முதல்வர் லெப்.கர்னல் நிர்பேந்தர்சிங், மூத்த ஆசிரியர் பால்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: