குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம்

புதுச்சேரி, ஜன. 13: புதுவை முத்தியால்பேட்டையில் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் தொழிலாளிக்கு படுகாயம் ஏற்பட்டது. மூதாட்டி காயம் அடைந்தார். மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் தெருவோரங்களில் குப்பை பொறுக்கி வருபவர் செல்வம் (40). வழக்கம்போல் நேற்று காலை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கி அதை மூட்டையில் சேகரித்தார். பின்னர் அவர், காலை 10.30 மணியளவில் காராமணிக்குப்பம் சாலையில் உள்ள பழைய இரும்புக்கடையில் விற்பதாக சென்றார். முன்னதாக, பெருமாள் நாயுடு வீதி- காராமணிக்குப்பம் சாலை சந்திப்பில் பழைய இரும்புக்கடைக்கு எதிரே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை பொறுக்கினார். மேலும், குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு அட்டை பெட்டி மூடப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் நாட்டு வெடிகுண்டு இருந்தது. ஆனால் அவருக்கு அது வெடிகுண்டு என தெரியாததால், அதை பிரிக்க முயன்றார். அப்போது அது `டமார்’ என பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அவரது இடது கையின் ஒரு விரல் துண்டானது. மேலும், விரல்கள் சிதைந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட பழைய இரும்புக் கடையை நோக்கி ஓடி மயக்கம் போட்டு விழுந்தார். குண்டு வெடித்ததில் அவ்வழியாக சென்ற அன்னபூரணி (64) என்ற மூதாட்டிக்கும் காயம் ஏற்பட்டது. குண்டு சிதறல்கள் அவரது தோள்பட்டையில் தெறித்துள்ளன. குண்டு வெடித்ததால் அந்த வழியாக சென்ற மக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர், மாடியில் இருந்தவாறு வெளியே எட்டி பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கை விரல்கள் துண்டாகி ரத்தம் சொட்டி மயங்கிக் கிடந்த தொழிலாளி செல்வம் மற்றும் அன்னபூரணியை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் மோப்ப நாய் வீரா, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். குண்டு வெடித்த குப்பை தொட்டி பகுதியில் மக்கள் செல்லாதவாறு கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். வேறு வெடிகுண்டுகள் ஏதேனும் இருக்கிறதா? என குப்பைத்தொட்டி மற்றும் அங்கு கிடந்த குப்பைகளை ஆய்வு செய்தனர். சிதறிக்கிடந்த வெடிகுண்டு துகள்களையும் சேகரித்தனர்.

மேலும், சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், எஸ்பி சுபம் கோஷ் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செல்வத்திடம் வெடிகுண்டு பார்சல் எங்கிருந்து எடுக்கப்பட்டது? அங்குள்ள குப்பை தொட்டியில் எடுத்ததா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனும் அங்குவந்து பார்வையிட்டு நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். ஏற்கனவே புதுவையில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி இருக்கும் நிலையில், இப்போது குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளின் வெடிகுண்டு கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு உறுதியான உடனடி நடவடிக்கை மூலம் ஒடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: