ஊசுட்டேரியில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

புதுச்சேரி, ஜன. 13:  பறவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டின் சர்வதேச கருப்பொருளாக `பறவைகளை பாதுகாக்கவும்:  நெகிழியால் ஏற்படும் மாசுபாட்டிற்கான தீர்வாக இருங்கள்’   என்ற தலைப்பில், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, புதுச்சேரி ஹர்கோபிந்த் குரானா  அறிவியல் மன்றம், யூனிவர்சல் சுற்றுச்சூழல் கழகம் உள்ளிட்ட பல்வேறு  அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும்  உற்றுநோக்கல் நிகழ்ச்சி ஊசுட்டேரியில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக  பறவையியல் வல்லுனர் பூபேஷ் குப்தா கலந்து கொண்டு பறவைகள் தொடர்பான கையேடுகள், படங்கள், குறிப்புகள் மற்றும் ஓசைகள் மூலம் பறவைகளை அறியும் விதம் குறித்து விளக்கி கூறினார்.

வனப் பறவைகள் கணக்கெடுப்பு, பதிவு செய்தல்,  பட்டியல் தயாரித்தல் ஆகியன பற்றி பாலாஜி விளக்கி கூறினார். பொங்கல்  பறவைகள் கணக்கெடுப்பு தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்யும் முறை குறித்து ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் பகிர்ந்தார். இதில் கருத்தாளர்கள், பறவை ஆர்வலர்கள், துறை சார் வல்லுனர்கள், அறிவியல் மன்ற மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறிய நீர்க்காகம், சாம்பல் கூழைக்கடா, மஞ்சள் மூக்கு, நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், அறிவாள் மூக்கன்,  குருட்டு கொக்கு, மற்றும் நீலவால் இலைக்கோழி போன்ற பறவைகளை கண்டனர். நிறைவாக, பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு செய்யவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன் ஒரு பகுதியாக,  பறவைகள் குறித்த ஓவியப்போட்டியும் நடந்தது.

Related Stories: