காரைக்காலில் மலர்கண்காட்சி இந்தாண்டு நடத்தப்படுமா?

காரைக்கால், ஜன. 13: காரைக்காலில் மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசுக்கு விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுவாக மலர் கண்காட்சி என்பது ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரததேசமான மலை பிரதேசங்களில் தான் நடத்தப்படும். ஆனால் பொதுமக்களை மகிழ்விக்கும் பொருட்டு மலை பிரதேசம் அல்லாத காரைக்காலில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது.  மலை பிரதேசங்களுக்கு சென்று மலர்களை பார்வையிட முடியாத ஏழை மக்கள், இங்கு நடைபெற்று வந்த  மலர் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் இடம்பெறும் பல விதமான வண்ண மலர்களை கண்டு  மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கடந்த 3 வருட காலமாக காரைக்காலில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.

இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மலர் கண்காட்சியை இந்த ஆண்டு காரைக்காலில் நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயி சுரேஷ் கூறும்போது, மலர் கண்காட்சியின்போது வண்ண மலர்களின் விதைகள், செடிகள், மானிய விலை மற்றும் குறைந்த விலையில் விற்கப்படும். விதவிதமான மலர்செடிகள், மலர்களின் விதைகளையும், மலர் செடிகளையும் வாங்கி சென்று வீடுகளில் வைத்து வளர்ப்பார்கள். மலர் கண்காட்சி நடக்காததால் மலர்கள்,  செடிகள் கிடைப்பதில்லை என்று காரைக்கால் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி, மாகே, ஏனாம் ஆகிய பிரதேசங்களில் மலர் கண்காட்சி நடத்தும்போது காரைக்காலில் மட்டும் நடத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே இந்தாண்டு முதல் தொடர்ந்து மலர் கண்காட்சியை காரைக்காலில் நடத்த புதுச்சேரி அரசு முன்வர வேண்டும் என்றார்.

Related Stories: