தென்பெண்ணையாறு வறண்டதால் களையிழக்கும் ஆற்றுத்திருவிழா

விழுப்புரம், ஜன. 13:  விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாறு வறண்டு கிடப்பதால் ஆற்றுத்திருவிழா களைகட்டுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சாமிகளுக்கு தீர்த்தவாரிக்கு கூட தண்ணீரில்லாத நிலை உள்ளதால் சாத்தனூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து ஒரு வாரம் கொண்டாடப்

படும். போகி பண்டிகை, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வரிசையில் 6வது நாளாக ஆற்றுத்திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இத்திருவிழா சிறப்பாக நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், கண்டரக்கோட்டையிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை போன்ற இடங்களிலும் தென்பெண்ணை ஆற்றில் இத்திருவிழா நடைபெறும்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உள்ளிட்ட முக்கிய சாமிகள் ஆற்றங்கரையில் தீர்த்தவாரிக்கு வந்து செல்லும்.ஆற்றில் செல்லும் நீரில் சாமிகள் நீராடிய பின் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பொதுமக்கள் காலை முதலே ஆறுகளில் குளித்து சாமிகளை வணங்கிய பிறகு நாள் முழுவதும் ஆற்றுத்திருவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுவர். ஆறுகளில் மணல்கள் சுரண்டி எடுக்கப்பட்டதாலும், போதிய தண்ணீர் இல்லாமலும் ஆறுகள் முற்றிலும் வறண்டு கிடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழையின்றி ஆற்றில் தண்ணீர் செல்லாததால் தென்பெண்ணையாறு முற்றிலும் வறண்டு போனது. இதனால் இந்த ஆண்டு நடைபெறும் ஆற்றுத்திருவிழா களைகட்டுமா என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளில் தண்ணீர் இல்லாத போது சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். காணும் பொங்கல், ஆற்றுத்திருவிழாவையொட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆறுகளில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஆற்றுத்திருவிழா இந்த ஆண்டு களையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பேசும் போது, வடகிழக்கு பருவமழையினால் ஆற்றில் ஈரப்பதம் உள்ளது. தற்போது சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தால் கடைகோடிக்கு 2 நாட்களில் வந்து சேரும். நிலத்தடி நீர்மட்டம் அடிபாதாளத்துக்கு செல்வதால் ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும், வரப்போகும் ஆற்றுத்திருவிழாவுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் கோரிக்கை வைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப்

பணித்துறையினரும் தலையாட்டி பொம்மையாக விவசாயிகள் சொல்வதை கேட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

ஜனவரி மாத கடைசியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு: விவசாய சங்க நிர்வாகியும், திமுக மாவட்ட துணை செயலாளருமான ஜெயச்சந்திரனிடம் கேட்ட போது, தென்பெண்ணையாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் சரியாக திறக்கப்படவில்லை. 119 அடியில் தற்போது 96 அடி தண்ணீர் உள்ளது. ஆண்டுதோறும் சாத்தனூர் அணையிலிருந்து, தென்பெண்ணையாற்றில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 2,200 கனஅடியும், அக்டோபரில் 1,500 கனஅடியும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். நவம்பரில் போதிய மழை இருப்பதால் டிசம்பரில் 1,500 கனஅடி தண்ணீர் கொடுக்க வேண்டும். முதல் முன்னுரிமையே மூன்று மாவட்டங்களுக்குதான் கொடுக்க வேண்டும். அணையின் வலது, இடதுபுற வாய்க்காலில் அம்மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு மட்டும்தான் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது விவசாய பணிகளுக்கு திறந்து பயன்படுத்துகின்றனர். நமக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக கடந்த வாரம் நடந்த பொதுப்பணித்துறை ஆலோசனைக்கூட்டத்தில் நாங்கள் வலியுறுத்தினோம். அவர்கள் ஜனவரி 25ம் தேதிக்கு மேல் திறக்க வாய்ப்புள்ளதாக கூறினர். 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த தண்ணீர் முழுமையாக திறந்தாலே ஓரளவுக்கு கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வழிவகுக்கும். மாவட்ட நிர்வாகமும் இதனை முறையாக கண்காணித்து தண்ணீர் திறக்க உறுதுணையாக இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் பொன்முடி அமைச்சராக இருந்த போது, கடும் வறட்சியை எடுத்துக் கூறி முதலமைச்சர் உத்தரவின் பேரில் கடந்த காலங்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைப்போலவே மாவட்டத்தின் அமைச்சராக உள்ள சி.வி.சண்முகம் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: