உறுப்பினர்கள் சிறைபிடிப்பால் ஆவடத்தூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு

ஜலகண்டாபுரம், ஜன.12: ஜலகண்டாபுரத்தை அடுத்த ஆவடத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நங்கவள்ளி ஒன்றியம், ஆவடத்தூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. நேற்று நடந்த துணை தலைவர் தேர்தலில் 8வது வார்டு உறுப்பினர் முருகன், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்நிலையில், தனக்கு ஆதரவளித்த 8 வார்டு உறுப்பினர்களை நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் 5 கார்களில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்த சவுரியூர், கரட்டாண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வார்டு உறுப்பினர்களை கடத்திச்சென்று, தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர்.

 தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார், அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், வார்டு உறுப்பினர்களை விடுவித்து, சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறீ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் முருகன் தரப்பு ஆதரவாளர்களுக்கிடையே, சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனிடையே, துணைத்தலைவர் தேர்தலில் உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாததால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உத்திரசாமி தெரிவித்தார்.

Related Stories: