உறுப்பினர்களை அழைத்து வந்த கார்கள் அடித்து உடைப்பு

காடையாம்பட்டி, ஜன.12: காடையாம்பட்டி அடுத்த பொட்டியபுரம் ஊராட்சியில், 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சிமன்ற தலைவராக ஜெயமணி செல்வமணி வெற்றி பெற்றார். இந்நிலையில், ஜெயமணியின் கணவர் செல்வமணி, தனது ஆதரவு உறுப்பினர்களான கோவிந்தம்மாள், பழனியம்மாள், ரவி, சக்திவேல், ரகுபதி ஆகியோரை, பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த மறைமுகத் தேர்தலுக்காக, நேற்று காலை 11.30 மணியளவில் 2 கார்களில் அழைத்து வந்தனர். அப்போது, பொட்டிபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பிருந்த மற்ற வார்டு உறுப்பினர்களான அபிராமி, அமுதா, மகேந்திரன், வெண்ணிலா ஆகியோரின் ஆதரவாளர்களான ராமகிருஷ்ணன், சுரேஷ் உள்ளிட்டோர், அந்த கார்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் சுரேஷை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக செல்வமணியின் ஆதரவாளரான ராஜா, பாமகவை சேர்ந்த ராமகிருஷ்னன் ஆகியோர், ஓமலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இடையே திமுகவை சேர்ந்த கோவிந்தம்மாள் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்து ஒமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: