கருத்து கேட்பு கூட்டத்துக்கு வந்த கிராம மக்கள் போலீசுடன் வாக்குவாதம்

விழுப்புரம், ஜன. 12:   விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆட்சிய எல்லை குறித்து முதல்கருத்துக்கேட்புக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது.  தொடர்ந்து நேற்று மாலையும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி தலைமையில் 20 வாகனங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள், இரண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கருவேப்பிலைபாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சியாக உருவாக்கி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்க கோரி, கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக வந்தனர். பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, மக்கள் வந்தனர். அங்கு, ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு பணிகளில் இருந்த போலீசார், மாஜி எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி தலைமையிலான மக்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, மக்கள் வாக்குவாதம் செய்ததையொட்டி, சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., ஜெயக்குமார் அவர்களிடம், ‘ கலெக்டரை சந்தித்து மனு அளிக்க அனைவரும் செல்ல முடியாது என்றும், பத்து, பத்து பேராக செல்லலாம்’ என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, கிராம மக்கள் பலர் மனுக்களை வழங்காமல் விரக்தியில் வந்த வாகனங்களிலேயே புறப்பட்டு சென்றனர்.இந்த சூழலில், மற்றொரு புறத்தில், விழுப்புரம் மாவட்டத்தோடு கருவேப்பிலைபாளையம் கிராமத்தை இணைத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, மற்றொரு பிரிவினர், பெருந்திட்ட வளாகம் பின்புறத்தில் உள்ள கேட் வழியாக வந்தனர். அவர்கள், அரசுக்கு நன்றி தெரிவித்த பேனரை பிடித்து வந்த போது, அதில் இருந்த தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ., படங்களுக்கு, பால் பாக்கெட்டுகளை தெளித்து அபிஷேகம் செய்தனர்.இந்த சம்பவங் களால், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Related Stories: