ஆடி அசைந்து தேரோட்டத்தில் வலம் வந்தார் நடராஜர்

சிதம்பரம், ஜன. 10: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழாவை முன்னிட்டு நேற்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று ஆருத்ரா தரிசனம் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் தேரோட்ட திருவிழா மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா மற்றும் பிச்சாண்டவர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்நிலையில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து அரோகரா அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தேர் இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண்கள் 4 வீதிகளிலும் அழகிய கோலமிட்டபடி சென்றனர். சிவனடியார்கள் தமிழிசை பாடல்களை இசையுடன் பாடியபடியே சென்றனர். மேலும் சிவ தொண்டர்கள் சிவ நடனமாடி மனமுருக நடராஜரை வழிபட்டனர். நேற்றிரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மதியம் 2 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.கோயில் திருவிழாவையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். ஆருத்ரா தரிசன விழாவுக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: