சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார்

புதுச்சேரி, ஜன. 10: தலைமை செயலர், உள்ளாட்சி செயலர்  உள்ளிட்ட அதிகாரிகள் மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் புகாரினை எம்எல்ஏ அளித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் அமைச்சரவை மூலம் முடிவு செய்யப்பட்டு, சட்டமன்றத்தின் மூலமாக  பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.மேலும் தன்னிச்சையாக தேர்தல் ஆணையரை தேர்வு  செய்யும் வகையில் வெளியிட்ட கிரண்பேடியின் அறிவிக்கையும் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே  மத்திய அரசு தலைமை செயலர் தலைமையில் குழு  அமைத்து தேர்தல் ஆணையரை தேர்வு செய்யுமாறு கடிதம் அனுப்பியது. இதனை மேற்கோள் காட்டி  ஏற்கனவே நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணனை நீக்குமாறு கவர்னர் கிரண்பேடி தலைமை  செயலருக்கு உத்தரவு போட்டார்.அதே நேரத்தில் புதிய தேர்தல் ஆணையரை  தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்த  விவகாரத்தில் கவர்னருக்கும் ஆளும் அரசுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ேவாம் என உள்ளாட்சி  அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயமூர்த்தி  எம்எல்ஏ, சபாநாயகர் சிவக்கொழுந்துவை நேற்று அவரது அறையில் சந்தித்து தலைமை செயலர்  அஸ்வனி குமார், உள்ளாட்சி செயலர் அசோக்குமார், உள்ளாட்சி இயக்குனர்  மலர்க்கண்ணன், சார்பு செயலாளர் கிட்டி பலராமன் மீது உரிமை மீறல் புகார்  எழுப்பி கடிதம் ெகாடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:கடந்த 2019 ஜூலை மாதம் 20ம் தேதி  சட்டசபை கூட்டத்தில், தேர்தல்  ஆணையரை புதிதாக நியமிக்க கோரும் விளம்பரத்தை  சபாநாயகர் ரத்து செய்தார்.அமைச்சரவை அன்றைய தினம்  பாலகிருஷ்ணன்  புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 23ம்  தேதி அரசின் சிறப்பிதழிலும் வெளியிடப்பட்டது. இன்றைய தேதி வரை அவர்  பணியாற்றி வருகிறார். தற்போது இந்த அரசின் ஆணையை அரசு அதிகாரிகள் மீறி உள்ளனர். கடந்த 7ம் தேதி அமைச்சரவைக்கு தெரியாமலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரிவிக்காமல்  தன்னிச்சையாக நியமன விதிகளை திருத்தி  புதிதாக விண்ணப்பிக்க கோரி  அறிவிக்கை வெளிவந்துள்ளது.

இது விதிகளை மீறிய  செயலாகும். சட்டப்பேரவையை அவமதிப்பதாகும். சட்டப்பேரவையின் உரிமை  மீறப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களையும், இந்திய அரசியலமைப்பை  அவமதிக்கும் வகையில் இருக்கிறது. சட்டமன்ற தலைவர், முதலமைச்சருக்கு  தெரியாமல், துறை அமைச்சர் ஒப்புதல் இல்லாமல் இந்த அறிவிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் மாண்பை பாதுகாக்கும் வகையில்,  தலைமை செயலர், உள்ளாட்சி செயலர், உள்ளாட்சி துறை  இயக்குனர், உள்ளாட்சி சார்பு செயலர் ஆகியோர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கும்படி  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, மனுவை பரிசீலித்து உரிமை மீறல்  குழுவுக்கு அனுப்பி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார். தலைமை செயலர், அதிகாரிகள் மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்திருப்பது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: