இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

விழுப்புரம், ஜன. 10:  மாவட்டதொழில் மையம் சார்பில் இளைஞர்கள் தொழில்தொடங்க மானியத்துடன் கடனுதவிக்கான நேர்காணல் ஆட்சியர் தலைமையில் நடந்தது.  விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு 3 விதமான சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ், தொழில் தொடங்கிட தகுதி வாய்ந்த நபர்களுக்கு, மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில், உற்பத்தித் தொடர்பான தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், உற்பத்தித் தொடர்பான தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவை தொடர்பான தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

 ஊரகப் பகுதியில் அமையும் தொழில்களுக்கு 35 சதவீத மானியமும், நகரப் பகுதியில் அமையும் தொழில்களுக்கு 25 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், பட்டம், தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலான திட்டங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி இத்திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்டதொழில்மைய மேலாளர் வாசுதேவன், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர்கள் கலந்துகொண்டு நேர்காணல் மூலம் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு கடனுதவி வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: