காலிபிளவர் பயிரிட்டு விவசாயி அசத்தல்

வில்லியனூர், ஜன. 9: காலிபிளவர் என்ற பூ வகையான உணவுப்பொருள் அதிக சுவையுள்ள கால்சியம் சத்து நிறைந்தது. இது நரம்பை பலமாக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல உணவு பொருள் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காலிபிளவர் சாகுபடி பெரும்பாலும் ஊட்டி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட குளிர் பிரதேச பகுதிகளில் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இவை ஒரு ஏக்கர் நிலத்தில் 15 ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்யலாம். கன்றுகள் வைத்து முறையாக பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூக்கள் வர ஆரம்பிக்கும். 80 நாட்களில் பூக்களை அறுவடை செய்ய முடியும். காலிபிளவர் செடிகள் வாங்குவது மற்றும் உரங்கள், உழவுக்கூலி, களைச்செடிகள் எடுப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள் என மொத்தம் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. காலிபிளவரின் ஒரு செடியில் இருந்து ஒரே ஒரு பூ மட்டுமே வரும். ஒரு ஏக்கரில் நடப்படும் 15 ஆயிரம் செடிகளில் 7,500 செடிகள் நல்ல முறையில் வளர்ந்து பூக்கள் வந்தால் கூட போதுமானது. ஒரு காலிபிளவரின் விலை ரூ.20க்கு விற்றால் கூட 7,500 பூக்கள் மூலம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கிடைக்கும். செலவுகள் போக 80 நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் எடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திடீர் விலை குறைவு ஏற்பட்டு பாதி விலைக்கு விற்றால் கூட ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக லாபம் கிடைக்கும் நல்ல தொழில் இது. ஆகையால் தமிழகத்தில் சில பகுதிகளில் இதனை சாகுபடி ெசய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான கலித்திரம்பட்டு பகுதியில் ரகு என்ற விவசாயி, காலிபிளவர் சாகுபடி செய்து அசத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், காலிபிளவர் நல்ல லாபம் தரும் பயிர். இதனை பயிர் செய்யும் போது 2 அடிக்கு கால் வெட்டி நடவு செய்ய வேண்டும். தண்ணீர் நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 22 நாட்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். கண்டிப்பாக புழு வரும். அப்போது உயிர்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். இதில் 3 ரகம் உள்ளது. 555 ரகம் 120 நாட்கள் பயிர், கென்யா 70 நாட்கள் பயிர், ேஷாப 80 நாட்கள் பயிர் ஆகும். நான் பயிர் செய்வது 555 ரகம்.

இது, குறிப்பாக பனிக்காலங்களில் பயிர் செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். கார்த்திகை மாதத்துக்கு முன் பயிர் செய்து, தை மாதத்துக்குள் மகசூல் எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பூ மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். முறையாக, பராமரித்தால் 90 நாட்களில் இருந்து 120 நாட்களில் மகசூல் எடுக்கலாம். பூவின் அளவுக்கு  ஏற்றார் போல் ரூ.15 முதல் 40 வரை விற்கப்படுகிறது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி ெசய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடி செய்யும் காலநிலைகளையும், மண்ணின் தன்மையையும் அறிந்து அறுவடை செய்யும்போது காலிபிளவர் பூக்களின் மார்க்கெட் நிலவரத்தையும் விவசாயிகள் தெரிந்து கொண்டு பயிர் செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்றார்.

புதுப்பெண் மாயம்

திருபுவனை, ஜன. 9: திருபுவனைபாளையம் ஜெயா நகரை சேர்ந்தவர் குமரன் மனைவி அனிதா (24). திருமணமாகி 3 மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் அவர், வீட்டில் இருந்து அங்குள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அனிதா வீடு திரும்பாததால், அவரது கணவர் குமரன் பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து குமரன் அளித்த புகாரின்பேரில் திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: