தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை சிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

தஞ்சை, டிச. 16: தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் பல கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் சிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பழுதான கண்காணிப்பு கேமராக்களை விரைந்து சரி செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சையில் உலக புகழ் பெற்ற பெரிய கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், வெளிமாநில, மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. கோயிலில் உள்ள சிலைகள், உலோக சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் கோயில் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா செயல்படவில்லை. இது கோயிலின் பாதுகாப்பு மற்றும் கோயிலுள்ள பொருட்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோயிலின் முன்புறம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும் கூடுதல் பாதுகாப்புக்காக 2014ம் ஆண்டு ரூ.1.30 கோடி மதிப்பில் 31 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 10 கேமராக்கள் மூலம் 1,000 மீட்டர் சுற்றளவில் எந்தவொரு நிகழ்வையும் துல்லியமாக படம் பிடித்து பதிவு செய்ய முடியும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு சந்தேகப்படும்படியான நபரின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரத்யேகமாக பதிவு செய்யும் வகையில் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கேமராக்களை கண்காணிக்க சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது கேமரா செயல்படாததால் போலீசார் கண்துடைப்புக்காக கண்காணிப்பு அறைக்கு வந்து செல்கிறார்கள்.ஓராண்டுக்கும் மேலாக 30 கேமராக்கள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன. ஒரு கேமரா மட்டுமே செயல்படுகிறது. கேமராக்கள் தொங்கி கொண்டு ஒயர்கள் அறுந்து கிடக்கிறது. இந்நிலையில் கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்பட்ட பின் செயல்படாமல் உள்ள கேமராக்களை சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கேமராக்கள் சீரமைக்கும் பணி இன்னும் நடக்கவில்லை. தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் கோயிலில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் விரைந்து சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: