தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அதிரை பகுதி கடலில் விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள்

அதிராம்பட்டினம், டிச. 16: அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அதிரை பகுதி கடலில் வெளிமாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டுமென அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இயற்கை இடர்பாடு மற்றும் கடலில் மீன்வளம் குறைந்து காணப்படுவது ஆகிய காரணங்களால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சமீபகாலமாக மீன் பிடிக்க செல்ல முடியாமல் இருந்தனர். அப்படியே மீன் பிடிக்க சென்றாலும் கடலில் மீன் வளம் குறைந்துள்ள நிலையில் மீன் வரத்து இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் கடல் வளத்தை குறைக்க காரணமாக உள்ள இரட்டை மடி, ரேஸ் மடி, சுருக்குமடி உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி வெளிமாவட்ட படகுகள் தொடர்ந்து அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மீன் பிடித்து வருவதாக நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஏரிப்புறக்கரை கடல் மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ராஜா கூறுகையில், சமீப காலங்களாக எங்களுக்கு புயல், மழை பாதிப்புகள் மற்றும் மீன் வரத்து குறைவு ஆகியவற்றால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் பகுதியில் நாகை, காரைக்கால் உள்ளிட்ட விசைப்படகு மீனவர்கள் கடற்கரை ஓரங்களில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். மீன் வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உடனடியாக தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: