×

வேலூர் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் பரிசோதிக்காமல் மருந்து வழங்கும் டாக்டர்கள் அடிப்படை வசதிகளும் கேள்விக்குறி

வேலூர், டிச.16:வேலூர் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், நோயாளிகளை பரிசோதிக்காமல் டாக்டர்கள் மருந்துகளை வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.வேலூர் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் காய்ச்சல், இருமல் உட்பட குறிப்பிட்ட உடல்நிலை பாதிப்புகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஈஎஸ்ஐ பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இதில் ரத்த பரிசோதனை, ஸ்கேன் எடுப்பது உள்ளிட்டவைகளுக்கு வேலூர் ஈஎஸ்ஐ தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஈஎஸ்ஐ மருந்தகத்திலேயே மருந்துகள் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் உள்ள டாக்டர்கள் உடல்நிலையை பரிசோதிக்காமல் மருந்துகளை வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கேள்விக்குறியாகி உள்ளதாக நோயாளிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஎஸ்ஐ மருந்தகத்தில் அவதிக்குள்ளானவர்கள் கூறுகையில், ‘பொதுவாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் டாக்டர்கள் ஸ்டெதாஸ்கோப் பயன்படுத்தி சுவாசம் மற்றும் இதய துடிப்பை பரிசோதிப்பார்கள். இல்லாவிட்டால் நாடி துடிப்பை பார்த்தும் ஒரு சில டாக்டர்கள் பரிசோதிப்பார்கள்.இதன் மூலம் உடல் பாதிப்புக்கு ஏற்ப மருந்துகளை வழங்க முடியும். ஆனால், வேலூர் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் உள்ள டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதிப்பதே கிடையாது. நோயாளிகள் கூறும் பிரச்னைகளை கேட்டு மருந்துகளை வழங்கிவிடுகின்றனர். பெரும்பாலான நாட்களில் டாக்டர்கள் தாமதமாக வருகின்றனர்.இதனால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஈஎஸ்ஐ மருந்தக வளாகத்தில் உள்ள கழிவறை 2 ஆண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால், கழிவறை புதர் மண்டி கிடக்கிறது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் அடிக்கடி ஆய்வு நடத்தி நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : Doctors ,Vellore ESI ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை