×

வேலூர் மாவட்டத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரயில்வே சுரங்க நடைபாதைகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர், டிச.16:வேலூர் மாவட்டத்ைத சுற்றி அமைந்துள்ள ரயில்வே சுரங்க நடைபாதைகள் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்,வேலூர் மாவட்டத்தை சுற்றி சேனூர், காட்பாடி ஜாப்ராபேட்டை, லத்தேரி ஏர்முனை, வள்ளிமலை கூட்ரோடு, பழைய காட்பாடி என பல இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைந்துள்ளன. இந்த சுரங்க நடைபாதைகள் பெரும்பாலும் முறையாக அமைக்கப்படாமல் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கின்றன.குறிப்பாக அதிகளவில் இருசக்கர, ஆட்டோ போக்குவரத்து நடைபெறுவதுடன், பாதசாரிகளும் அதிகளவில் சென்று வரும் ஜாப்ராபேட்டை, பழைய காட்பாடி, லத்தேரியில் இருந்து ஏர்முனை கிராமத்துக்கு செல்லும் சுரங்க நடைபாதைகள் மழைநீர் தேங்கியும், கழிவுநீர் தேங்கியும், மின்விளக்குகள் இன்றி சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக லத்தேரி ஏர்முனை கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறும்போது, ‘எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் அனைத்து தேவைகளுக்கும் லத்தேரிக்கு செல்ல வேண்டும். எங்கள் கிராமம் மட்டுமின்றி எங்கள் ஊரை சுற்றி அமைந்துள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் கல்வி, மருத்துவ சிகிச்சை, அத்தியாவசிய பண்டங்கள் வாங்க, விளைபொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய என எல்லாவற்றுக்கும் லத்தேரிக்கும், காட்பாடிக்கும் இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாகவே செல்ல வேண்டும்.சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சுரங்க நடைபாதை மழைநீர் தேங்கி குட்டையாக காட்சி அளிப்பதுடன், மாலை நேரங்களில் இருட்டாகவும் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் நடமாட்டமும், விஷஜந்துக்களின் நடமாட்டமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ரயில்வே சுரங்கநடைபாதைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதுடன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப சீரமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்னர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்