அணைக்கட்டு தாலுகா பிச்சாநத்தம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புளிய மரம் அகற்றம் விஏஓ போலீசில் புகார்

அணைக்கட்டு, டிச.16: அணைக்கட்டு தாலுகா பிச்சாநத்தம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புளியமரம் அகற்றப்பட்டுள்ளதால் விஏஓ போலீசில் புகார் அளித்துள்ளார்.அணைக்கட்டு தாலுகா கரடிகுடி அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து நீர்நிரம்பி கோடி செல்லும் கால்வாயின் கிழக்கு பகுதியில் அரசுக்கு சொந்தமான 2 புளிய மரங்கள் இருந்தது. இந்த புளிய மரத்தில் இருந்து காய்க்ககூடிய புளியம் பழங்கள் பறித்துக்கொள்ள ஆண்டுதோறும் ஊராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு வந்தது.மேலும், மகசூல் தரக்ககூடிய புளிய மரம் என்பதால் வருவாய் துறையினர் கணக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அங்கிருந்த 2 புளிய மரத்தில், அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் கட்டியுள்ள வீட்டின் அருகே இருந்த மரத்தை கடந்த 10ம் தேதி இரவோடு இரவாக சிலர் வேரோடு வெட்டி அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். மறுநாள் இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விஏஓவிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில், விஏஓ சாட்லுதுரை, கடந்த 13ம் தேதி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அரசுக்கு சொந்தமான 21/2 எண் கொண்ட புளிய மரத்தை அனுமதியின்றி இரவோடு இரவாக வெட்டிச்சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில், நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆண்டுதோறும் தொடர்ச்சியாக அந்த மரத்தில் இருந்து புளி மகசூல் ஏலம் எடுத்துவரும் அப்பகுதியை சேர்ந்த சிலர் மரம் வெட்டி செல்ல வருவாய் துறையினரே உதவியிருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் 12ம் தேதி புகார் அளித்துள்ளனர்.இதுபோன்று இருதரப்பினர் மாறி, மாறி புகார் கூறியிருப்பதால் மரத்தை வெட்டியவர்கள் மற்றும் அதற்கு உதவியவர்கள் யார் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: