ஆத்தூர் பால் கூட்டுறவு சங்கத்தில் முன்பணம் வாங்கி கொண்டு பால் விநியோகம் செய்யாத ஊழியர் பொதுமக்கள் முறையீடு

ஆத்தூர், டிச.16:ஆத்தூர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க விற்பனை ஊழியர், பால் நுகர்வோரிடம் முன்பணம் வாங்கி கொண்டு, கடந்த 3 நாட்களாக பால் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் சங்கத்திற்கு வந்து முறையீடு செய்தனர்.ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில், ஆத்தூர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவின் பால் ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு விநியோகம் செய்யப்படும் பாலுக்குரிய தொகையை அவ்வப்போது ஊழியர்கள் நுகர்வோரிடம் வசூலிப்பது வழக்கம். இந்நிலையில், ஒரு சில ஊழியர்கள் பால் நுகர்வோரிடம் முன்பணம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பால் ஊழியர் ஒருவர் ஆத்தூர் நகர பகுதியில் உள்ள காந்திநகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதியில், பால் நுகர்வோரிடம் மாதம்தோறும் ₹650 முதல் ₹1300 வரை முன்பணமாக வசூல் செய்து, பால் வழங்கி வந்துள்ளார். முன்பணம் செலுத்தாதவர்களுக்கு பால் சப்ளையை தன்னிச்சையாக நிறுத்தியுள்ளார். இதனால் இவர் பால் சப்ளை செய்யும் ஏரியாவில் 200க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் பாலுக்கு முன்பணம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக அவர் வீடுகளுக்கு பால் சப்ளை செய்யவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், சங்க அலுவலகத்திற்கு வந்து கேட்டபோது அங்கிருந்து ஊழியர்கள் நுகர்வோரிடம் முன்பணம் வசூலிக்க கூறவில்லை என்றும், அந்த நபர் பணிக்கு வருவதில்லை எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து காந்திநகர், சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்த பால் நுகர்வோர் பாலுக்கான முன்பணத்தை கையாடல் செய்துள்ளதாக கூறி சங்கத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து சங்க உதவி எழுத்தர் மணி கூறுகையில், ‘பால் சப்ளை செய்யும் நபர் உடல்நிலை சரியில்லாததால் விடுமுறையில் உள்ளார். அவர் பால் சப்ளை செய்யும் இடங்களுக்கு மாற்று நபர் மூலம் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முன்பணம் வசூல் செய்தது குறித்து சங்கத்திற்கு நேரில் வந்து காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் விசாரித்ததால், தலைவரை நேரில் சந்திக்கும்படி கூறியுள்ளோம். மற்றபடி பால் சப்ளைக்கு முன்பணம் வசூலிக்க யாரும் கூறவில்லை,’ என்றார்.

Related Stories: