கலர் துண்டுகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்

சேலம், டிச.16: உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என, பயிற்சி வகுப்பில் கலெக்டர் ராமன் அறிவுறுத்தினார்.  தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில், 12 ஒன்றியங்களில் உள்ள 2,294 பதவிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து, 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,005 பதவிகளுக்கு 30ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக 2,935 பேரும், வாக்குப்பதிவு அலுவலர்களாக 18,692 பேரும் என மொத்தம் 21,645 அலுவலரல்கள் பணியாற்றவுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தன. மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலும், தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில், மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு, வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் மற்றும் இடைப்பாடியில் உள்ள அரசுப்பள்ளிகளில் நடந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும், மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். முழுக்க, முழுக்க வாக்கு சீட்டு முறையில் நடைபெறுவதால், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சீட்டுகளை முழுமையாக சரிபார்த்து அதில் கையொப்பமிட வேண்டும். இதேபோல், வாக்குப்பதிவிற்கான பொருட்கள் அனைத்தும் உள்ளதா என சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குப்பெட்டியை திறந்து காட்டுவதுடன், பூத் எண்ணை ஒரு அட்டையில் எழுதி பெட்டியில் போட வேண்டும். வாக்குச்சீட்டுகளை வரிசையாக வழங்காமல், ரேண்டம் அடிப்படையில் மாற்றி, மாற்றி வழங்க வேண்டும். கலர் துண்டுகள் மற்றும் அரசியல் குறியீடு உள்ள பொருட்களை பயன்படுத்துவதால், ஏதேனும் சர்ச்சைகள் உண்டாகலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருந்து, சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்தார். ெதாடர்ந்து, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் ராமன், அங்கு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், ஆர்டிஓ அமிர்தலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: