தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இன்று லேப்டாப்

சேலம், டிச.16:தமிழக அரசுப்பள்ளிகளில் கடந்த 2 கல்வியாண்டில், பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு இன்றைக்குள் லேப்டாப் வழங்க, சிஇஓக்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2017-18 மற்றும் 2018-19ம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்றைக்குள் (16ம் தேதி) லேப்டாப்களை வழங்க வேண்டும் என சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) சுகன்யா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:சிறப்பு திட்ட துறை அரசாணையில் 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் பிளஸ் 2 பயின்று தேர்ச்சி பெற்று, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து உயர்கல்வி பெறுவதற்கான சான்றினை (போனபைட் சான்றிதழ்) பெற்றுக்கொண்டு, லேப்டாப் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை இயக்குநரும் ஏற்கனவே அறிவுரைகளை வழங்கியுள்ளார். எனவே, 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டில் பயின்று மாணவர்களிடம் போனபைட் சான்றிதழை பெற்றுக்கொண்டு, 16ம் தேதிக்குள் (இன்று) லேப்டாப் வழங்க வேண்டும். மாணவர்கள் லேப்டாப் பெற அன்றே கடைசிநாள் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் போக, இன்னும் தேவை இருந்தால் பள்ளிகளில் பெறப்பட்ட போனபைட் சான்றிதழ் அடிப்படையில், லேப்டாப் தேவைப்பட்டியல் தயார் செய்ய வேண்டும். கூடுதலாக இருந்தால் எத்தனை கூடுதலாக உள்ளது என்ற விவரத்தை பள்ளிகளில் இருந்து பெற்று 17ம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் லேப்டாப் தேவைப்படாத பட்சத்தில் கூடுதல் லேப்டாப் தேவையில்லை என்றும், கையிருப்பில் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதன் விவரத்தையும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: