×

சென்டர் மீடியன்களை அகற்றியதால் பர்கூரில் போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணகிரி, டிச.16: பர்கூரில், சாலை சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட சென்டர் மீடியன்கள் சாலையோரம் அப்படியே கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, சாலை விபத்தும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வழியாக திருப்பத்தூர், ஆம்பூர், வேலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள், லாரிகள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் பஸ், லாரிகளால் பர்கூர் நகரில் விபத்துகள் ஏற்படாமல் தடுத்திடவும், போக்குவரத்து தடையின்றி வாகனங்கள் சென்று வரவும், பர்கூர் போலீஸ் நிலையம் அருகில் இருந்து, பழைய பஸ் நிலையம் வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இதனால், விபத்துகள் தடுக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் சீராக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன்களை அகற்றி, சாலையோரம் வைத்தனர். ஆனால், பணி முடிந்தும் மீண்டும் அந்த சென்டர் மீடியன்களை சாலையின் நடுவில் வைக்காமல், சாலையோரம் அப்படியே விட்டுள்ளனர். இதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக பர்கூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், பின்னர் வெளியே வரும் போது, அதிக வேகத்துடன் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.

போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை. எனவே, சாலையோரம் உள்ள சென்டர் மீடியன்களை மீண்டும் சாலையின் நடுவில் வைத்து, விபத்து தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் தடுத்திட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...