×

ஆந்திர அரசின் சூழ்ச்சியை தடுக்காததால் பர்கூரில் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கும் ஏரிகள்

கிருஷ்ணகிரி, டிச.16: சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது, ஆந்திர அரசின் சூழ்ச்சியை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய ஒன்றியம் பர்கூர் ஒன்றியமாகும். இந்த ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுக்கு முன்பு இங்குள்ள பாம்பாற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இதனால். இந்த ஒன்றியத்தில் தென்னை மரங்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டது. அத்துடன் விவசாயமும் செழிப்புடன் இருந்தது. ஆந்திரா மாநில எல்லையில் உள்ள இந்த ஒன்றியத்தில் ஓடும் பாம்பாற்றில் தற்போது முற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதற்கு ஆந்திரா முதல்வராக இருந்தவரும், தற்போது குப்பம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளவருமான சந்திரபாபு நாயுடு தான் காரணம் என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இவர் ஆந்திர முதல்வராக இருந்தபோது, தமிழகத்திற்கு ஆந்திர வனப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் நோக்கில், 100க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டினார். இதனால், ஒரு சொட்டு தண்ணீர் கூட பர்கூர் ஒன்றியத்திற்கு வராமல் போனது. அதை தடுக்கவும் தமிழக அரசு அப்போது தவறிவிட்டது. அதன் விளைவாக, தற்போது பர்கூர் ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததுடன், பெரும்பாலான தென்னை மரங்கள் கருகி போனது. விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, மாற்று பணிக்காக அண்டையை மாநிலங்களுக்கு விவசாயிகள் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகோல்புதூர், வாணி ஒட்டு உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து கால்வாய் அமைத்து கிருஷ்ணகிரி அருகே உள்ள படேதலாவ் ஏரிக்கு கொண்டு வந்து இணைத்தால், மழை காலங்களில் வரும் உபரிநீர் மூலம் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கையை துரிதமாக எடுக்காமல், அரசும், மாவட்ட நிர்வாகமும் காலம் தாழ்த்தி வருவதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Tags : Andhra Pradesh ,lakes ,Barkur ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி