×

விலை அதிகரித்தும் வெங்காயம் பதுக்கலை தடுக்காத சிவில் சப்ளைத்துறை அதிகாரிகள்

உத்தமபாளையம், டிச.16: தேனி மாவட்ட அளவில் வெங்காயம் விலை குறையாத நிலையில் மாவட்ட அளவில் பதுக்கிய இடங்களை சோதனை செய்யாமல் சிவில்சப்ளைத்துறை அதிகாரிகள் மவுனம் காப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் காய்கறி விளைச்சல் அதிகம் உள்ளது. இங்குள்ள சின்னமனூர், தேவாரம், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகள் அதிக அளவில் உள்ளூர் தேவைகள் போக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.தேவாரம் பகுதிகளில் மட்டும் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் காய்கறிகள் ரெகுலராகவே விவசாயம் செய்யப்படும். சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட ஊர்களில் 500 ஏக்கருக்கும் மேல் செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விவசாயம் தற்போது குறைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வராத காரணத்தால் இன்னும் இதன் விலை குறையவில்லை. சின்ன வெங்காயத்தின் தேவை அதிகம் உள்ளதால் ரூ.100க்கும் மேல்தான் விலைபோகிறது.

இந்நிலையில் எகிப்து நாட்டில் இருந்து பெரிய வெங்காயம் மட்டுமே வருகிறது. அதுவும் தேனி மாவட்டத்திற்கு இன்னும் வரவில்லை. இதனால் வெங்காயத்தின் தேவை அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் உணவு பதுக்கலை மாவட்ட சிவில் சப்ளைத்துறை அதிகாரி தலைமையில் சோதனை செய்து இதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், தேனியில் உள்ள மாவட்ட சிவில்சப்ளைத்துறை அதிகாரிகள் (டிஎஸ்ஓ) தேனியை விட்டே வருவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் பதுக்கல் அதிகரித்து வருகிறது. எனவே, வெங்காயம் பதுக்கல் உள்ள இடங்களை கண்டறிந்து சோதனை செய்தால் மட்டுமே இதன் விலை உயர்வை கட்டுப்படுத்திட முடியும்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``வெங்காயம் விலை இறங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்கிறது. இருப்பு வைத்துள்ள பதுக்கல்காரர்களிடம் சோதனை செய்தால் மட்டுமே விலை கீழிறங்கும். எனவே, மாவட்ட சிவில்சப்ளைத்துறை (டிஎஸ்ஓ) அதிகாரிகள், உத்தமபாளையம் சிவில் சப்ளைத்துறையுடன் இணைந்து சோதனை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

Tags : Civil Supplies Officers ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...