×

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

கம்பம், டிச. 16: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெறக்கோரி, கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 774 பேரை போலீசார் கைது செய்தனர்.குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெறக்கோரி கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பாக பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்தவர்கள் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் பாபா முகமது பதுருதீன் தலைமை தாங்கினார். கம்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகள், முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஹாஜி அப்துல் அஜிஸ் வரவேற்றார். திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசினார். செயலாளர் ஹாஜி மௌலவி ஜெய்னுல் ஆபிதீன் சிராஜி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 774 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் திருமணமண்டபத்திற்கு கொண்டு செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்தனர். ஆனால் பேரணியாக போலீஸ் தடையை மீறி தலைமை தபால்நிலையம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மண்டபத்திற்கு அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பாஹி, மதிமுக கம்பம் நகர செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர் நாகராஜன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் போஸ் மற்றும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் பகுதியைச்சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏடிஎஸ்பிகள் மோகன்குமார், சுருளிராஜ், டிஎஸ்பிகள் சின்னக்கண்ணு, முத்துக்குமார், ஈஸ்வரன், ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் என 443 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Tags : Demonstration ,withdrawal ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்