×

தேனி மாவட்டத்தில் காலை வரை கொட்டிய மழை ஆண்டிபட்டியில் மழை மறைவு

தேனி, டிச. 16: வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்து வரும் நிலையில் நேற்று காலை வரை மாவட்டத்தில் மழை கொட்டித்தீர்த்தது. ஆண்டிபட்டி ஒன்றியம் மட்டும் மழை மறைவு பிரதேசத்தில் இருப்பதால், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் நீர் வளம் குறைவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சற்று குறைவாகவே பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை கடந்த 80 நாட்களுக்கும் மேலாக நல்ல முறையில் பெய்து வருகிறது. மாவட்டத்தின் சராசரி மழை அளவைக் கடந்து மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கிய மழை சனிக்கிழமை முழுவதும் பெய்து, ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணி வரை பெய்தது.ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 11.6 மி.மீ., தேக்கடியில் 11.4 மி.மீ, கூடலூரில் 5.4 மி.மீ, உத்தமபாளையத்தில் 7 மி.மீ, வீரபாண்டியில் 9 மி.மீ, பெரியகுளத்தில் 20 மி.மீ, போடியில் 7.2 மி.மீ, ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூரில் தலா 6.2 மி.மீ மழை பதிவானது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் செழிப்புடன் காணப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் பெய்த மழை அளவினை கணக்கிடுகையில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மட்டும் மழை குறைவாக பெய்துள்ளது. காரணம் உசிலம்பட்டி கணவாய் பகுதிகளில் உயர்ந்து நிற்கும் மலைத்தொடர்கள் வடகிழக்கு பருவமழையினை மறைத்து விடுகிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டிபட்டி ஒன்றியம், மயிலாடும்பாறை ஒன்றியத்தில் பாதி கிராமங்கள், பெரியகுளம் ஒன்றியத்தின் பாதி கிராமங்கள் எப்போதும் மழை மறைவு பிரதேசம் தான். சராசரி தேனி மாவட்டத்தின் மழை அளவினை விட இந்த பகுதியில் மழை குறைவாக இருக்கும். இதனால் இங்கு நிலத்தடி நீர் மட்டம் குறைவது தான். தற்போதைய நிலையில் தொடர்ச்சியான மழையால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் மானாவாரி பயிர்கள் சிறப்பாக விளைந்துள்ளன என மழை அளவினை கணக்கிடும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Showers ,district ,Theni ,
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!