×

ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 ஆயிரத்து 147 பேர் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிநாள் களைகட்ட வாய்ப்பு

சிவகங்கை, டிச.16: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் டிச.27 மற்றும் டிச.30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு டிச.27ல் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்புத்தூர், கல்லல் ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு டிச.30ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். மனு பரிசீலனை நாளை நடக்கிறது. வேட்பு மனு வாபஸ் பெற டிச.19ம் தேதி கடைசி நாளாகும். முதல் நாளில் 20 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை வரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 29 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக காளையார்கோவில் ஒன்றியத்தில் 6 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 367 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிட 54 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட இதுவரை மொத்தம் ஆயிரத்து 463 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 186 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை ஆயிரத்து 910 பேரும், சனிக்கிழமை ஒரே நாளில் ஆயிரத்து 378 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இப்பதவிக்கு இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 288 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திருப்புவனம் ஒன்றியத்தில் 452 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் அனைத்து பதவிகளுக்கும் சனிக்கிழமை மாலை வரை 5 ஆயிரத்து 147 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழு பதவிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் அனைத்துக்கட்சியினரும் இன்று மனுத்தாக்கல் செய்வர். மேலும் மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். மொத்தம் 3 ஆயிரத்து 748 ஊரக பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Tags : election ,government ,
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனச்...