×

விடுமுறை தினம் பழநியில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து பாதிப்பு

பழநி, டிச. 16: விடுமுறை தினத்தின் காரணமாக பழநியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வார விடுமுறையின் காரணமாக பழநி கோயிலுக்கு நேற்று ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. தவிர, கேரள பக்தர்களும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் சாரல் மழையிலும் பக்தர்கள் நடமாட்டம் பழநி நகரில் அதிகளவு இருந்தது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதிகக் கூட்டத்தின் காரணமாக சாமி தரிசனத்திற்கு சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது.

அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். பக்தர்கள் வந்த வாகனங்கள் அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி சாலை, சுற்றுலா பஸ் நிறுத்தங்களில் அணிவகுத்து நின்றன. இப்பகுதிகளில் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் மட்டுமாவது இப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : pilgrims ,holiday ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!