×

குளக்கரை சீரமைப்பு பணிக்காக 264 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்

அண்ணாநகர்: வில்லிவாக்கம், பாடி மேம்பாலம் அருகே சுமார் 39 ஏக்கர் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் கரைப்பகுதி மற்றும் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த குளத்தில் நீர் சேமிக்க முடியாமல் வறண்டு காணப்படுகிறது. இதை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், சென்னை குடிநீர் வாரிய கட்டுப்பாட்டில் இருந்த இந்த குளத்தை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை பெற்று, தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குளக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை அங்கிருந்து காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இவர்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று இடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, வில்லிவாக்கம் குளக்கரையில் பயோமெட்ரிக் முறையில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதனால் குளக்கரையில் வீடு கட்டியவர்கள் முறையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டுவதற்கு நேற்று காலை 10 மணியளவில் அமைந்தகரை மண்டல மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 264 வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். இந்த கணக்கெடுப்பு பணியின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர், இன்ஸ்பெக்டர் ரிஜிஷ் பாபு தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags : Houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்